பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

பாட்னா,

பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சமூகநீதி – மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். தலைவர் கலைஞரும் லாலு பிரசாத்தும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தபோதும் பாஜகவுக்கு அஞ்சாமல் அரசியல் செய்ததன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் லாலு பிரசாத்.

ராகுல் காந்தி, ஜேதஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்கள் கடலென திரண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தை காக்க, மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்றிணைந்துள்ளீர்கள். உங்கள் இருவரின் நட்பு அரசியலைக் கடந்து உடன்பிறப்புகள் போன்றது. பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரப்போவது இந்த நட்புதான்.

பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப்போகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது; அதனால்தான் பாஜக தடுக்க முயற்சிக்கிறது. 65 லட்சம் வாக்காளர்களை சொந்த மண்ணின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதம் தவிர வேறு எதுவும் இல்லை. பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது.

தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறுகிறார்; தேர்தல் ஆணையத்தின் இந்த மிரட்டல்களுக்கு ராகுல் காந்தி பயப்படமாட்டார். ராகுலின் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட தேர்தல் ஆணையத்தால் பதில் சொல்ல முடியவில்லை. ராகுல் காந்தியின் வார்த்தையிலும், பார்வையிலும் எப்போதும் பயம் இருக்காது. இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல்காந்தி உள்ளார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்.

400 இடங்கள் என கனவு கண்ட பாஜகவை 240 இடங்களில் அடக்கியது இந்தியாகூட்டணிதான். மெஜாரிட்டி என ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகின்றனர். மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும்.

கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவே பீகாரைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் ராகுல் காந்தியின் பலம் ஆகும். இதுதான் தேஜஸ்வியின் பலம் ஆகும். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதை எதிர்த்து பீகார் போர்க்குரலை எழுப்பியிருக்கிறது என்பதுதான் வரலாறு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.