Ravichandran Ashwin : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், யாரும் எதிர்பாராத வகையில், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், இனி வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் களமிறங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த திடீர் ஓய்வு முடிவு, கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், 2026 ஐபிஎல் சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்புவார் எனச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Add Zee News as a Preferred Source
வெளிநாட்டு லீக்குகளுக்காக ஓய்வா?
அஸ்வின், கடந்த டிசம்பர் 2024-லேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இப்போது, ஐபிஎல்-லிருந்தும் ஓய்வு பெறுவதன் மூலம், வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்ட அஸ்வின், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டு வரும். எனது ஐபிஎல் கிரிக்கெட்டர் வாழ்க்கை இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் எனது புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது,” என்று கூறியுள்ளார். மேலும், தனது ஐபிஎல் பயணத்தில் உறுதுணையாக இருந்த அணிகளுக்கும், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு லீக்குகளுக்கான பிசிசிஐ விதிகள் என்ன?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) விதிகளின்படி, ஒரு இந்திய வீரர் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் முழுமையாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அஸ்வின் இந்த விதிமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளதால், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (BBL), தென்னாப்பிரிக்காவின் SA20, ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20 போன்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு அவருக்கு தற்போது எந்தத் தடையும் இல்லை.
முன்னதாக, யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, யூசுப் பதான், தினேஷ் கார்த்திக் போன்ற பல இந்திய வீரர்கள் இந்த விதிகளின் கீழ் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வினின் சாதனைகள்
2009-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய அஸ்வின், தனது 16 ஆண்டுகால வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/34 ஆகும். பந்துவீச்சில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு, 833 ரன்களையும், ஒரு அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் எனப் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய அஸ்வின், 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இப்போது, ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ள அஸ்வின், புதிய லீக் போட்டிகளில் எப்படிச் சாதிக்கப்போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
About the Author
S.Karthikeyan