இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஆகஸ்ட் 27) அறிவித்தார். இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Add Zee News as a Preferred Source
ஸ்ரீகாந்த் கூறுகையில், “அஸ்வின் ஏன் இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற்றார் என எனக்குப் புரியவில்லை. நான் அவரது இடத்தில் இருந்திருந்தால் இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் விளையாடி இருப்பேன். அவருக்கு பணம், புகழ், மதிப்பு எல்லாம் உள்ளன. எனவே அவையே காரணம் அல்ல. ஆனால், இன்னும் இரண்டு சீசன்கள் ஐபிஎல் விளையாடியபின் வெளிநாட்டு லீக்குகளுக்குச் சென்றிருக்கலாம்” என்றார்.
ஐபிஎல் கொடுக்கும் அங்கீகாரம்
ஸ்ரீகாந்த், “ஐபிஎல் தரும் புகழ், விளம்பரம், அங்கீகாரம் – உலகின் எந்த லீக்கிலும் கிடைப்பதில்லை. வெளிநாட்டு லீக்குகளில் விளையாடும் போக்கை அஸ்வின் தொடங்கி வைக்கலாம். ஆனால், ஐபிஎல் அளிக்கும் புகழ் மற்றும் வாய்ப்புகளுக்கு இணையாக மற்ற எந்த லீக்கிலும் கிடைக்காது” என வலியுறுத்தினார்.
அதேவேளை, அஸ்வினின் வளர்ச்சிக்கு ஐபிஎல் மிகப் பெரிய காரணம் என்றும் அவர் நினைவு கூர்ந்தார். “அஸ்வின் உள்ளூர் போட்டிகளிலும் சிறந்தார், இந்திய ஜெர்சியிலும் பிரகாசித்தார். ஆனால், அவரை உலகமே அடையாளம் கண்டது ஐபிஎல் மூலமாகத்தான். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் காட்டிய ஆட்டமே அவரை பிரபலமாக்கியது. கிறிஸ் கெய்லை அவர் தொடர்ந்து அவுட் செய்த தருணங்கள் ரசிகர்களின் நினைவில் என்றும் நிற்கும்” என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
அஸ்வினின் சாதனைகள்
ஐபிஎல் அரங்கில் அஸ்வின் ஒரு அதிரடி சுழற்பந்து வீச்சாளராகவும், அதே சமயம் ரன்களை கட்டுப்படுத்தும் ஒரு சிக்கனமான பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார். மொத்தம் 221 போட்டிகள் விளையாடிய அவர் 7.20 என்ற எகானமி ரேட்டுடன் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கிலும் பங்களித்து 833 ரன்களை குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் அஸ்வின் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் இணைந்தபோதிலும், அந்த ஒப்பந்தத்தின் பாதியிலேயே ஓய்வு பெறுவது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
ரசிகர்கள் குழப்பம்
ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது மாறாத கேள்வி ஒன்று எழுந்துள்ளது. “பணம், புகழ், வாய்ப்புகள் அனைத்தும் இருக்கும்போது அஸ்வின் ஏன் திடீரென ஓய்வு முடிவு எடுத்தார்?”. சிலர், அஸ்வின் உலகின் பிற டி20 லீக்குகளில் விளையாட புதிய பாதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கருதுகின்றனர். ஐபிஎல் வடிவமைத்த நட்சத்திரமாக விளங்கிய அஸ்வினின் திடீர் ஓய்வு, ரசிகர்களிடையே குழப்பமையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
About the Author
R Balaji