Mohammed Shami, IPL Mini Auction 2026: ஐபிஎல் 2025 தொடர் முடிந்து இன்னும் மூன்று மாதங்கள் கூட நிறைவேடையவில்லை. ஆனால் அதற்குள் ஐபிஎல் குறித்த பேச்சுகள் அதிகமாகிவிட்டன. சஞ்சு சாம்சனின் டிரேட் தொடங்கி பல்வேறு அனல் பறக்க செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
Add Zee News as a Preferred Source
IPL Mini Auction 2026: அஸ்வின் ஓய்வு அறிவிப்பு
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரும், கடந்த மெகா ஏலத்தில் ரூ. 9.75 கோடிக்கும் எடுக்கப்பட்ட ரவிசந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். திடீர் திடீர் என ஓய்வை அறிவிப்பதில் தோனியை மிஞ்சிவிட்டார் அஸ்வின் என்ற பெயரும் தற்போது அவருக்கு கிடைத்திருக்கிறது.
அஸ்வினின் ஓய்வு சிஎஸ்கே ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், மறுபக்கத்தில் மினி ஏலத்திற்கு சிஎஸ்கே பர்ஸில் ரூ.9.75 கோடி கிடைக்கும் என்பது உற்சாகத்தை அளித்திருக்கிறது. டிசம்பர் மாதத்திற்குள் மினி ஏலம் நடத்தப்பட்டுவிடும். இன்னும் 4 மாதக் காலமே இருப்பதால், தொடர்ந்து ஐபிஎல் செய்திகள் வந்துகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
IPL Mini Auction 2026: ஷமியை ஏலத்தில் கழட்டிவிடும் SRH
சிஎஸ்கேவை போல் பலரும் எதிர்பார்க்கும் ஒரு அணி என்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சொல்லலாம். 2024 சீசனில் அதிரடியாக விளையாடி 2வது இடத்தை பிடித்தாலும், 2025 சீசனின் ஆரம்பத்தில் பெரியளவில் சொதப்பலான ஆட்டத்தை வெளியடுத்தியது. இருப்பினும் கடைசி கட்டத்தில் சுதாரித்து 6வது இடத்தில் நிறைவு செய்தது. எனவே, அணியில் இருக்கும் ஒரு சில தேவையில்லாத வீரர்களை விடுவித்து, புதிய வீரர்களை எடுக்கும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அப்படியிருக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருக்கும் முகமது ஷமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை உண்டாக்கி உள்ளன. “ஏலத்தில் எனக்கு ஏலம் கேட்கும் எந்த அணிக்காகவும் விளையாட நான் தயாராக இருக்கிறேன், என் கையில் எதுவும் இல்லை. இது ஐபிஎல், கிரிக்கெட் திருவிழா, இது மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. உங்களுக்காக யார் ஏலம் கேட்டாலும், அவர்களுடன் சேர்ந்து செல்ல வேண்டும்” என்கிறார்.
IPL Mini Auction 2026: ஓரங்கட்டப்படும் ஷமி
இதன்மூலம் ஷமி அணியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு பதில் புதிய பந்தில் காத்திரமாக பந்துவீசக்கூடியவரை எடுக்க சன்ரைசர்ஸ் திட்டமிடும். இவர் மெகா ஏலத்தில் ஹைதராபாத் அணி ரூ.10 கோடிக்கு எடுத்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் விளையாடிய ஷமி 9 போட்டிகளில் 6 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். அவரின் துடிப்பு மிக்க பந்துவீச்சு தொடர்ந்து மிஸ்ஸாகி வந்தது. இதன்காரணமாக, அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு கூட தேர்வாகவில்லை. தற்போது ஆசிய கோப்பை தொடரிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். துலிப் டிராபியில் கிழக்கு மண்டலம் அணிக்காக விளையாடி வருகிறார்.
IPL Mini Auction 2026: லக்னோ கண்டிப்பாக தூக்கும்
ஒருவேளை, ஷமியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்தால் நிச்சயம் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணி கழுகைப் போல் காத்திருக்கும். ஏனென்றால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பெரிய இக்கட்டான சூழலில் இருக்கிறது. வேகப்பந்துவீச்சு படையே அங்கு பெரியளவுக்கு இல்லை எனலாம். ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான் அவர்களின் ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளர்களாக கடந்த சீசனில் செயல்பட்டார்கள். மயாங்க் யாதவை ரூ.11 கோடிக்கு லக்னோ அணி தக்கவைத்தது. மொஷின் கானை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது. ஆனால் இருவருமே காயத்தால் பெரியளவில் போட்டிகளில் விளையாடவே இல்லை. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக ஷமார் ஜோசப் மட்டுமே உள்ளார். எனவே, ஷமியை ஹைதராபாத் அணி விடுவித்தால் நிச்சயம் லக்னோ அணி அவரை கொத்தித் தூக்கும்.