Ravichandran Ashwin : கிரிக்கெட் உலகின் ஸ்மார்டான வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், தனது திடீர் ஐபிஎல் ஓய்வு குறித்து சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுடன் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக்கொண்ட அஸ்வின், “மூன்று மாத ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் கடினமானது” என்று கூறி, ஓய்வுக்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
வெளிநாடுகளில் விளையாட ஆர்வம்
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் (BBL) அல்லது தென்னாப்பிரிக்காவின் SA20 போன்ற தொடர்களில் பங்கேற்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தோனியின் அர்ப்பணிப்புக்கு அஸ்வின் பாராட்டு
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், “அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால், மூன்று மாதங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் சவாலானது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அது மிகவும் களைப்பை ஏற்படுத்துகிறது. அதனால்தான், 44 வயதிலும் தோனி இன்னும் ஐபிஎல் விளையாடுவதைப் பார்க்கும்போது நான் வியந்து போகிறேன்” என்று கூறினார். மேலும், வயதாகும்போது ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் தொடர்ந்து விளையாடுவது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்வினின் ஐபிஎல் பயணம்
2009-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக அறிமுகமான அஸ்வின், தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு, 2025 சீசனில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவரை 9.75 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியது. அஸ்வின் மொத்தமாக 220 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 833 ரன்களை அடித்துள்ளார். 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் CSK அணி கோப்பையை வென்றபோது, அதில் அஸ்வின் ஒரு முக்கிய வீரராக இருந்தார்.
அஸ்வின் சர்ச்சை
அஸ்வின் ஓய்வுக்கு பின்னணியில் ஒரு சர்ச்சையும் இருக்கிறது. அவர் தன்னுடைய யூடியூப் சேனலில், தென்னாப்பிரிக்க பிளேயர் டெவால்டு ப்ரீவிஸை சிஎஸ்கே வாங்கியது குறித்து ஒரு தகவலை கூறினார். அந்த தகவல் சர்ச்சையாக மாறியது. இதன் பின்னர், இது குறித்து விளக்கம் அளித்த சிஎஸ்கே, ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே டெவால்டு ப்ரீஸ் வாங்கப்பட்டார் என்றும் தெரிவித்தது. இது, நிர்வாக ரீதியாக சென்னை அணிக்கும் அஸ்வினுக்கும் இடையே பிளவை உண்டாக்கியது. இதன்பிறகே அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இறுதியாக, ஓய்வு பெற்றாலும் அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட இருப்பதாகத் தெரிவித்தது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.