ஆசிய கோப்பை 2025 தொடருக்காக பலரும் காத்துக் கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும் என்பதால் ஒவ்வொரு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் திலக் வர்மா, துலீப் ட்ராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். துலீப் டிராபியில் தெற்கு மண்டல அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புதிய கேப்டன் மற்றும் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Add Zee News as a Preferred Source
தேசிய அணிக்கு முன்னுரிமை
செப்டம்பர் 4 முதல் 7 வரை பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெறவுள்ள துலீப் கோப்பை அரையிறுதி போட்டியில், தெற்கு மண்டல அணி, வடக்கு மண்டல அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு தெற்கு மண்டல அணியின் கேப்டனாக திலக் வர்மா முதலில் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், துலீப் கோப்பை அரையிறுதி தொடங்கும் அதே நாளான செப்டம்பர் 4-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புறப்பட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதால், திலக் வர்மா துலீப் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
புதிய கேப்டன் மற்றும் மாற்று வீரர்கள்
திலக் வர்மா விலகியதை தொடர்ந்து, தெற்கு மண்டல அணியின் புதிய கேப்டனாக, துணை கேப்டனாக இருந்த கேரள வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் என். ஜெகதீசன் புதிய துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அணியில் திலக் வர்மாவுக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்த இளம் வீரர் ஷேக் ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், தெற்கு மண்டல அணியின் மற்றொரு முக்கிய வீரரான தமிழகத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர், கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக துலீப் கோப்பை அரையிறுதியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரியை சேர்ந்த அனுபவ வீரர் அங்கித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
#DuleepTrophy South Zone squad update
OUT – Tilak Varma (Asia Cup) & Sai Kishore (Injury)
IN – Shaik Rasheed & Ankit Sharma pic.twitter.com/ACqZDYeztY
— Cricbuzz (@cricbuzz) August 31, 2025
ஆசிய கோப்பையில் திலக் வர்மா
இந்திய டி20 அணியில் 3-வது வரிசை வீரராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் திலக் வர்மா, ஆசிய கோப்பையிலும் அதே இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார் திலக் வர்மா. ஷுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ள போதிலும், திலக் வர்மாவின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் அவருக்கும் முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.
About the Author
RK Spark