மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அந்த வாய்ப்பில் ஒரளவு சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க போராடி வருகிறார்.
இருப்பினும் தற்சமயம் இந்திய அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி போன்ற முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரவி பிஷ்னோய், தான் இதுவரை எதிர்கொண்ட கடினமான பேட்ஸ்மேன் இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “அபிஷேக் சர்மா. இப்போது, அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு எதிராக பந்து வீச நான் கூடுதல் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று உணர்கிறேன். ஒரு லெக்-ஸ்பின்னராக, அவர் என்னை மிகவும் நன்றாக விளையாடுகிறார். அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவருக்கு எதிராக நான் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்று எப்போதும் யோசிக்கிறேன். இப்படிப்பட்ட நல்ல பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும்போது, எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று தொடர்ந்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்” என கூறினார்.
ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் இதுவரை 8 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் சர்மா 37 ரன்கள் அடித்துள்ளார். குறிப்பாக இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல்.-ல் ரவி பிஷ்னோய் பந்துவீச்சை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்க விட்டார்.