லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஜேமி ஓவர்டான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார். இவர் கடைசியாக இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியில் விளையாடினார்.
இது குறித்து பேசிய அவர், “மிகவும் யோசித்த பிறகு, நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் எனது தொழில்முறை வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இதுவரை விளையாட்டில் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நுழைவாயிலாக உள்ளது. நான் விளையாட்டைக் கற்றுக்கொண்ட இடம் இதுதான்.
இருப்பினும், எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்க இனி சாத்தியமில்லை. இனிமேல், எனது கவனம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ஒருநாள்) இருக்கும். என்னால் முடிந்தவரை அணிக்காக எல்லாவற்றையும் கொடுப்பேன்” என்று கூறினார்.