Harbhajan Singh : இந்தியப் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில், 2008 ஆம் ஆண்டு நடந்த ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் (Slapgate) மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஐபிஎல்-லின் முன்னாள் தலைவர் லலித் மோடி, 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கும் ‘பியான்ட் 23’ என்ற நிகழ்ச்சியில் லலித் மோடி கலந்து கொண்டார். அப்போது இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்திருப்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், அதற்கான வீடியோ இதுவரை வெளிவராத நிலையில், லலித் மோடி அதை வெளியிட்டது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Add Zee News as a Preferred Source
ஹர்பஜன் சிங்கின் கண்டனம்:
இந்த வீடியோ வெளியிடூ குறித்து ஹர்பஜன் சிங் மிகவும் கோபமாகப் பேசியுள்ளார். “வீடியோ கசிந்தது முற்றிலும் தவறு. இது நடந்திருக்கவே கூடாது. இதற்குப் பின்னால் சுயநல நோக்கங்கள் இருக்கலாம். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதை மீண்டும் நினைவூட்டுவது தேவையற்றது” என்று ஹர்பஜன் ‘இன்ஸ்டன்ட் பாலிவுட்’ என்ற ஊடகத்திடம் தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங், பலமுறை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்திடம் பலமுறை மன்னிப்பு கேட்டதோடு, இப்போது இருவரும் நல்ல நண்பர்களாகவும் உள்ளனர். ஆனால், லலித் மோடி வெளியிட்ட இந்த பழைய வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களிடையே மீண்டும் அந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹர்பஜன் மேலும் கூறுகையில், “என்ன நடந்தது என்று நினைத்து நான் வருந்துகிறேன். நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, எல்லோருக்கும் மனதளவில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது தவறு நடந்துவிட்டது, அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். நடந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், நான் தவறு செய்துவிட்டேன் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன். மனிதர்கள் தவறு செய்வார்கள், நானும் செய்தேன். மீண்டும் தவறு செய்யாமல் இருக்க, கடவுள் என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.
சம்பவம் என்ன?
2008 IPL தொடரின் போது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவில், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீசாந்த் மைதானத்திலேயே அழுதுவிட்ட வீடியோ காட்சிகள் அப்போது பரவலாகப் பேசப்பட்டன.
தண்டனை:
இந்த சம்பவத்திற்காக ஹர்பஜன் சிங், 2008 IPL தொடரில் 11 போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த தண்டனை, IPL-லில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகும்.
லலித் மோடியின் உள்நோக்கம்:
லலித் மோடி, 2010 ஆம் ஆண்டில் IPL நிதி முறைகேடுகள் காரணமாக இந்தியாவிலிருந்து வெளியேறி, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர் இந்தியாவிலிருந்து வெளியேறியதில் இருந்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இப்போது ஹர்பஜன் – ஸ்ரீசாந்த் வீடியோவை வெளியிட்டு கிரிக்கெட் உலகில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார்.
ஸ்ரீசாந்தின் மனைவி கண்டனம்:
இந்த வீடியோ குறித்து ஸ்ரீசாந்தின் மனைவி பேசும்போது, “கவனம் ஈர்ப்பதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மீண்டும் தூண்டிவிட முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டதன் நோக்கம் என்ன?” என்று லலித் மோடிக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
About the Author
S.Karthikeyan