டெல்லி,
பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள், வாக்கு திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டார்.
இந்நிலையில், வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மோடியை அவமதிப்பதை ராகுல் காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், ராகுல் காந்தியை மக்கள் நிராகரித்து பிரதமர் மோடி மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் வெற்றிக்குப்பின் மோசடி உள்ளதாக கூறுவதன் மூலம் வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிக்கிறார். ராகுல் காந்தியின் இந்த ஆணவத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் தெரிவிப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.