ஐபிஎல் 2025 மெகா ஏலம் முடிந்த பிறகு அனைத்து அணிகளும் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுத்துவிட்டோம் என்று இருந்தாலும், அவர்கள் ஐபிஎல் 2025 சீசனில் சரியாக விளையாடாத போது ஏமாற்றம் அடைந்தனர். பல தரப்பட்ட முடிவுகளுடன் ஐபிஎல் 2025 சீசன் முடிவுக்கு வந்த நிலையில், ஒவ்வொரு அணியும் அடுத்த ஆண்டு மினி ஏலத்தில் யார் யாரை தக்கவைக்கலாம் மற்றும் யார் யாரை கழட்டிவிடலாம் என்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்த சூழலில், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், கேப்டன் பொறுப்பில் ஒரு பெரிய மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்சர் படேலுக்கு பதிலாக, ஐபிஎல் 2026ல் புதிய கேப்டனை நியமிக்க அணி நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
Add Zee News as a Preferred Source
அக்சர் படேலின் கேப்டன்சி
ஐபிஎல் 2025 சீசனில், டெல்லி கேபிடல்ஸ் அணியை ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்தினார். அவரது தலைமையில், டெல்லி அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்தது. இது ஒரு மோசமான செயல்பாடு இல்லை என்றாலும், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறியது, இது அணி நிர்வாகத்திற்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. பேட்டிங்கில் அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டாலும், அவரது பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்தது. இந்த நிலையில், அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் நோக்கில், தலைமை மாற்றத்திற்கு நிர்வாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு பிறகும் அக்சர் படேல் தொடர்ந்து டெல்லி அணியில் பயணிப்பார் என்று கூறப்படுகிறது.
புதிய கேப்டன் யார்?
டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளன. இந்த போட்டியில் சில முக்கிய வீரர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய கேப்டனான சஞ்சு சாம்சன், அந்த அணியிலிருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை அவர் ஏலத்திற்கு வந்தால், அவரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. சஞ்சு சாம்சன், இதற்கு முன்னர் இரண்டு சீசன்களுக்கு டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எல். ராகுல்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள கே.எல். ராகுலும் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளார். சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் அவருக்கு கை கொடுக்கும். ஆனால் கடந்த ஆண்டே கேப்டன்சி பொறுப்பை வேண்டாம் என்று சொல்லி இருந்தார் கேஎல் ராகுல்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை, அணியின் எதிர்கால தலைவராக உருவாக்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் ஏலத்திற்கு வந்தால் டெல்லி நிர்வாகம் அவரை எடுக்க ஆர்வமாக உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த புதிய கேப்டன் தேடல், ஐபிஎல் 2026க்கான அணி மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஏலத்திற்கு முன்னதாக, எந்த வீரரை கேப்டனாக நியமிக்க உள்ளோம் என்பதை டெல்லி அணி அறிவிக்கும்.
About the Author
RK Spark