மும்பை,
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 2027 உலகக்கோப்பை (50 ஓவர்) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.
இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் அவர் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரானப் போட்டியில் தடுமாறிய தம்மிடம் ரோகித் ஆறுதலாக பேசியதாக கலீல் அகமது தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்காக ரோகித் சர்மா இன்னும் 10 வருடங்கள் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அன்று ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த எனக்கு அன்றைய நாள் நன்றாக அமையவில்லை. அப்போது ரோகித் பாய் டிரஸ்ஸிங் ரூமில் என்னிடம் தனியாக வந்து பேசினார். அணி ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது, ஆனால் அவர் என்னுடன் பேசினார். நான் எனது திறமைகளை உணரவில்லை என்று அவர் கூறினார்.
நாங்கள் வெளியேறும்போது, ரசிகர்கள் அவரது பெயரை கத்திக் கொண்டிருந்தனர், அப்போது அவர் என்னிடம், ‘இவை அனைத்தும் உனக்காகவும் நடக்க வேண்டும். நீயும் இதை விரும்ப வேண்டும், நேர்மறையாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். அவர் போன்ற ஒரு கேப்டன், ஆட்டத்திற்குப் பிறகு என்னுடன் இப்படி பேசியது, அவர் எவ்வளவு அன்பான மனிதர் என்று என்னை ஆச்சரியப்படுத்தியது. ரிஷப் உடனும் அவர் இதேபோல் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் மோசமான ஆட்டத்தை விளையாடும்போது மக்கள் உங்களைப் பார்க்கக் கூட மாட்டார்கள், ஆனால் அவர் வித்தியாசமானவர்.
சமீபத்தில், துலீப் டிராபியின்போது என்சிஏ-வில் அவரை சந்தித்தேன். அவர் மிகவும் உடற்தகுதியுடன் இருந்தார், அதனால் நான் அவரிடம் இப்படியே இருங்கள், தொடர்ந்து விளையாடுங்கள் என்று கூறினேன். என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு கேப்டனையும் மனிதரையும் நான் பார்த்ததில்லை. அவர் ஒரு மாணிக்கம், அவருக்கு என் மனதில் நிறைய மரியாதையும் அன்பும் உள்ளது. இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்காக ரோகித் சர்மா இன்னும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நான் உணர்கிறேன், இது எனது தனிப்பட்ட உணர்வு” என்று கூறினார்.