நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கீழ் சேலதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வித்தியாசமான செடிகளை வளர்த்து வருவதாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரித்திருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுவாகச் சென்று சோதனை செய்துள்ளனர். வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் காய வைத்த மான் இறைச்சி கத்தி போன்றவற்றையும் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னணி குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், “தேனாடுகம்பை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 64 வயதான கண்ணன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் ரகசியமாக 12 கஞ்சா செடிகளை வளர்த்து வந்திருக்கிறார். அதோடு 300 கிராம் கஞ்சாவும் வைத்திருந்தார்.

கஞ்சா செடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டது. மேலும் கடமானை வேட்டையாடி அதன் கறியை உப்புக் கண்டம் போட்டுப் பயன்படுத்தி வந்திருக்கிறார். 2 கிலோ மான் இறைச்சியும் 5 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறை மற்றும் வனத்துறை மூலம் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.