புதுடெல்லி,
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர், அந்த மாநிலத்தில் உள்ள கிஷன்கர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக, கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதற்காக அவர் 2019-ம் ஆண்டு ஜூலை வரை ஓய்வூதியம் பெற்று வந்தார். அதன் பிறகு அவர் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.
2022-ம் ஆண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக இருந்த அவர் மீது, உரிய நேரம் தரமறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. ஆனால் திடீரென்று கடந்த ஜூலை 21-ந் தேதி ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதற்கு பின்னணியில் பா.ஜனதாவின் அழுத்தம் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கொடுத்த கடிதத்தை பெற்றது பா.ஜனதா தலைவர்களை அதிருப்தி அடைய செய்ததாக கூறப்பட்டது. ராஜினாமா செய்த பின்னர் ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த வாரம் அவர், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். இதனை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பதவி விலகிய பிறகு ஜெகதீப் தன்கர் வெளியில் வராமலேயே இருந்தார். அவர், துணை ஜனாதிபதிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வீட்டின் வளாகத்திலேயே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்ததுடன், அந்த வீட்டிலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து வந்தார். கடந்த 40 நாட்களாக அங்கேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று ஜெகதீப் தன்கர், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். அவர் இந்திய தேசிய லோக் தள கட்சியின் அபய் சிங் சவுதாலாவுக்கு சொந்தமாக டெல்லியின் சத்தார்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறினார். அவருக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் பண்ணை வீட்டுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டன.