மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். அந்த வாய்ப்பில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் தம்மை டி20 வீரர் என்று நினைப்பதாக ரிங்கு தெரிவித்துள்ளார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் 55 சராசரியை வைத்துள்ள தமக்கு இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2026 டி20 உலகக்கோப்பையிலும் விளையாடுவதே லட்சியம் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ரசிகர்கள் நான் சிக்சர்கள் அடிக்கும்போது மகிழ்ச்சியடைகிறார்கள், அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால், எனது ரஞ்சி கோப்பை சராசரியும் மிகவும் சிறப்பாக உள்ளது. நான் அங்கு 55-க்கு மேல் சராசரி வைத்திருக்கிறேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். நான் இந்தியாவுக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன், அதில் ஒரு போட்டியில் நன்றாக செயல்பட்டேன்.
நான் ஒரு டி20 வீரர் மட்டுமல்ல. வாய்ப்பு கிடைத்தால் எல்லா விதமான கிரிக்கெட்டிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். ஒரு வடிவத்திற்கு மட்டுமான வீரர் என்று முத்திரை குத்தப்படுவது எனக்கு பிடிக்கவில்லை. நான் எல்லா வடிவங்களிலும் விளையாடக்கூடிய வீரராக என்னை பார்க்கிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது எனது கனவு, வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்த தயாராக இருக்கிறேன்.
டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதும், அந்த கோப்பையை வெல்வதும் எனது மற்றொரு கனவு. அதற்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன். வரவிருக்கும் தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டால், உலகக்கோப்பைக்கான விஷயங்கள் தெளிவாகும். அதுதான் எனது இறுதி இலக்கு. ஆசிய கோப்பையில் எனது நாட்டிற்காக சாதிப்பேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என கூறினார்.