லக்னோ,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். மிகச்சிறந்த ஸ்விங் பவுலராக கருதப்பட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கடந்த 2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் இதுவரை 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அதுபோக ஐ.பி.எல். தொடரில் 190 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
இவர் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் மனம் தளராத அவர் உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த வருட ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த அவர் அந்த அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது உத்தரபிரதேச டி20 லீக்கில் விளையாடி வரும் புவனேஸ்வர் குமாரிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியில் மீண்டும் நீங்கள் விளையாடுவதை ரசிகர்கள் எதிர்பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. இந்திய தேர்வாளர்களால் மட்டுமே பதில் சொல்ல முடியும். களத்தில் 100 சதவீதம் உழைப்பது மட்டுமே என் வேலை. அதை நான் செய்து வருகிறேன். உத்தரப்பிரதேசத்திற்காக முஷ்டாக் அலி, ரஞ்சி, அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், அங்கும் நான் என் முழு முயற்சியை வழங்குவேன்.
ஒரு ஒழுக்கமான பந்துவீச்சாளராக, என் கவனம் உடற்தகுதி மற்றும் பந்து வீச்சின் மீது மட்டுமே உள்ளது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு உதவாது. உங்கள் செயல்பாடு மிக முக்கியமானது. ஒருவர் தொடர்ந்து நல்ல கிரிக்கெட் விளையாடினால், அவரை நீண்ட காலம் புறக்கணிக்க முடியாது. அணியில் தேர்வு செய்யப்படாவிட்டாலும், 100 சதவீதம் உழைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவை தேர்வாளர்களின் கையில் உள்ளது” என்று கூறினார்.