India National Cricket Team: இந்திய அணி (Team India) கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில் இருந்து வருகிறது. கடைசியாக இங்கிலாந்தின் டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், வங்கதேச சுற்றுப்பயணம் அரசியல் காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. எனவே, ஆகஸ்ட் மாதத்தில் வேறு சர்வதேச போட்டிகள் ஏதும் இல்லை.
Add Zee News as a Preferred Source
Team India: துலிப் டிராபியில் முன்னணி வீரர்கள்…
தற்போது துலிப் டிராபி 2025 (Duleep Trophy 2025) தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப். 11இல் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதார், கலீல் அகமது, தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள். தற்போது மேற்கு மண்டலம் – மத்திய மண்டலம் முதல் அரையிறுதிப் போட்டியிலும், தெற்கு மண்டலம் – வடக்கு மண்டலம் 2வது அரையிறுதிப் போட்டியிலும் விளையாடி வருகின்றன.
Team India: ஆசிய கோப்பைக்கு பின்…
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் வரும் செப். 9ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் (Asia Cup 2025) தொடங்க இருக்கிறது. இம்மாதம் இறுதிவரை தொடர் நீள்கிறது. தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடர் டி20ஐ வடிவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு பின் இந்திய அணி உள்நாட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
Team India: உள்நாட்டில் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள்
ஆசிய கோப்பையில் இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி (IND vs WI Test) எந்த வகையில் அமைக்கப்பட இருக்கிறது என்ற கேள்வி தற்போதே எழுந்துவிட்டது. சுப்மான் கில்லுக்கு இது கேப்டனாக 2வது தொடர், உள்நாட்டில் முதல் தொடர் என்பதால் மிக முக்கியமான தொடர். இங்கிலாந்திலேயே நெருக்கடியில் சுப்மான் கில் சிறப்பாக செயல்பட்டாலும், இங்கு மேற்கிந்திய தீவுகள் அணியை சர்வ சாதாரணமா எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
ஏனென்றால் அடுத்து நவம்பரிலும் உள்நாட்டில் தென்னாப்பிரிக்க அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா (IND vs SA Test) விளையாட இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலேயே தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழு இறுதிசெய்ய வேண்டும். பந்துவீச்சை பொருத்தவரை மேற்கிந்திய தீவுகள் தொடரில் பும்ரா விளையாடமாட்டார் என தெரிகிறது. அதேநேரத்தில், சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோரே முதன்மை தேர்வாக இருப்பார்கள். ஷமிக்கு வாய்ப்பு குறைவு. சுழற்பந்துவீச்சிலும், ஆல்-ரவுண்டர்கள் ஆப்ஷனிலும் இந்திய அணிக்கு பஞ்சமே இல்லை.
Team India: நம்பர் 5 பேட்டர் யார்?
கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோரின் இடம் உறுதியாக இருக்கிறது. சாய் சுதர்சனுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால், நம்பர் 5 பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆகிய ஸ்பாட்களே தற்போது இந்திய அணிக்கு பிரச்னை எனலாம். நம்பர் 5 பேட்டரை எடுத்துக்கொண்டால் அதில் சர்ஃபராஸ் கான் விளையாட அதிக வாய்ப்புள்ளது எனலாம். அதேநேரத்தில் தற்போது அந்த இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயரும், ருதுராஜ் கெய்க்வாட் கூட கடுமையாக முயற்சிப்பார்கள். கருண் நாயருக்கு இனி வாய்ப்புகள் கிடைக்காது. சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) காயத்தில் இருந்து மீண்டுவிட்டால் நிச்சயம் மேற்கு இந்திய தீவுகள் தொடரில் அவர்தான் நம்பர் 5 என உறுதியாக சொல்லலாம்.
Team India: விக்கெட் கீப்பிங்கில் பெரிய சிக்கல்
ஆனால் விக்கெட் கீப்பிங்கில் பெரிய சிக்கல் இருக்கிறது. கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்டால் ஓரளவுக்கு சிக்கல் தீரலாம். ஆனால், இந்திய அணி வேறு விக்கெட் கீப்பர் பேட்டரை தேடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போது ரிஷப் பண்ட் காயத்தில் (Rishabh Pant Injury) இருந்து குணமடைந்து வருகிறார். அவர் குணமடைந்து மீண்டும் உடற்தகுதியை அடைய இன்னும் சில காலம் எடுக்கும். அவர் மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாட வாய்ப்பில்லை.
அடுத்து துருவ் ஜூரலும் (Dhruv Jurel Injury) தற்போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் துலிப் டிராபி தொடரிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் உடற்தகுதியை பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. அடுத்த ஆப்ஷனில் உள்ள இஷான் கிஷன் இங்கிலாந்தில் e-bike இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிறு கணுக்கால் காயத்தால் (Ishan Kishan Injury) அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு இடது காலில் தையல் மற்றும் பிளாஸ்டர் போடப்பட்டுள்ளதாம். இந்தச் சூழலில் அவரும் துலிப் டிராபி தொடரில் பங்கேற்கவில்லை. இவர் உடற்தகுதியை நிரூபிப்பதிலும் சிக்கல் இருக்கிறது.
Team India: நாராயண் ஜெகதீசனுக்கு அதிக வாய்ப்பு
இதனால், ஃபார்மில் இருக்கும் விக்கெட் கீப்பரை தேடும் இந்திய அணிக்கு தற்போது பொக்கிஷமாக கிடைத்துள்ளார், நாராயண் ஜெகதீசன் (Narayan Jagadeesan). ஆம், ஜெகதீசன் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார். ஆனால் அவரின் வெள்ளைப் பந்து போட்டிகளே அவருக்கு கவனத்தைப் பெற்றுக் கொடுத்தன. இருப்பினும், இங்கிலாந்து தொடரின்போது ரிஷப் பண்ட் காயமடைந்தபோது, பேக்அப் விக்கெட் கீப்பராக இந்திய அணி ஜெகதீசனையே அழைத்தது.
இதனால், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், இஷான் கிஷன் ஆகியோர் இல்லாத சூழலில் ஜெகதீசன் நிச்சயம் ஸ்குவாடில் தேர்வு செய்யப்படுவார் எனலாம். மேற்கண்ட மூவரில் ஒருவர் உடற்தகுதி பெற்றாலும் ஜெகதீசன் குறைந்தபட்சம் பேக்அப் விக்கெட் கீப்பராக கூட அணியில் தேர்வு செய்யப்படுவார். ஏனென்றால் தற்போது ஜெகதீசன் நல்ல பார்மில் இருக்கிறார்.
Team India: இரட்டை சதம் நோக்கி ஜெகதீசன்…
நேற்று (செப்டம்பர் 4) தொடங்கிய துலிப் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் தெற்கு மண்டலம் அணி சார்பில் ஜெகதீசன் விளையாடி வருகிறார். இதில் வடக்கு மண்டலம் அணிக்கு எதிராக தற்போது 148 ரன்களை அடித்து களத்தில் நிற்கிறார். இன்று ஆட்டம் தொடர்ந்தால் இவர் 200 அடிக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிச்சயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசனை எடுக்கும். இதனால், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தரை தொடர்ந்து ஸ்குவாடில் 3வது தமிழக வீரராக ஜெகதீசனும் இணைய வாய்ப்புள்ளது.