ஐபிஎல் 2025 சீசனில் ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வருகிறது. வரும் மினி ஏலத்தில் நல்ல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல அதிரடி மாற்றங்களை அணிக்குள் கொண்டு வர உள்ளது. இதற்காக சில வீரர்களை வெளியிடவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பல மூத்த மற்றும் நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து விடுவித்து, ஏலத்திற்கான பணத்தை அதிகரிக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
ஏன் இந்த அதிரடி முடிவு?
2025 ஐபிஎல் தொடரில் தோனி கேப்டனாக இருந்தும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சிஎஸ்கே, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் மோசமாக செயல்பட்டது. சிலர் சிறப்பாக விளையாடி இருந்தாலும், ஒரு சிலரின் தோல்வியால் போட்டி மாறியது. குறிப்பாக, டாப்-ஆர்டர் மற்றும் மிடில்-ஆர்டரில் அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லாதது, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே, அணியை மறுகட்டமைக்கவும், இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கவும், மெகா ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட சில வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.
விடுவிக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள்
அஸ்வின் – ரூ.9.75 கோடி
டெவோன் கான்வே – ரூ. 6.25 கோடி
ரச்சின் ரவீந்திரா – ரூ.4 கோடி
ராகுல் திரிபாதி – ரூ.3.4 கோடி
தீபக் ஹூடா – ரூ.1.75 கோடி
சாம் கரன் – ரூ.2.4 கோடி
விஜய் சங்கர் – ரூ.1.2 கோடி
நாதன் எல்லிஸ் – ரூ.2 கோடி
சிஎஸ்கேவின் புதிய கணக்கு
இந்த வீரர்களை விடுவிப்பதன் மூலம், சிஎஸ்கே-வின் பர்ஸ் சுமார் ரூ.34.45 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பணத்தை கொண்டு, சிஎஸ்கே நிர்வாகம் மூன்று முக்கிய இடங்களை தங்கள் அணியில் நிரப்ப திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு அதிரடியான டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன், ஒரு நம்பிக்கையான இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன், ஒரு தரமான ஆல்-ரவுண்டர் ஆகியோரை எடுக்க திட்டம் வைத்துள்ளனர்.
சஞ்சு சாம்சன் அணிக்கு வருவாரா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேற உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சம்சனை, ஏலத்திற்கு முன்பாகவே அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல்-ரவுண்டர்களையும் சிஎஸ்கே குறிவைக்கலாம். அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அவரது இடத்தை நிரப்ப பல்வேறு வீரர்களை சிஎஸ்கே யோசித்து வருகிறது. இந்த அதிரடி மாற்றங்கள், ஐபிஎல் 2026 மினி ஏலத்தை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது.
About the Author
RK Spark