ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க தவறிய நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், இந்த தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையேயான இந்த தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இளம் வீரர் துருவ் ஜூரல், அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source
முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். துலீப் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்திய ஆயுஷ் படோனி மற்றும் கடந்த ரஞ்சி சீசனில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷ் துபே ஆகியோருக்கும் இந்ததொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து பாதியில் விலகிய நிதிஷ் குமார் ரெட்டியும் பூரண குணமடைந்து இந்த தொடரில் அணிக்கு திரும்பியுள்ளார்.
இரண்டாவது போட்டியில் இணையும் கே.எல். ராகுல் மற்றும் சிராஜ்
இந்திய அணியின் மூத்த வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இரண்டாவது போட்டிக்கான அணியில் இணைவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் போட்டிக்கு பிறகு, அணியில் உள்ள இரண்டு வீரர்களுக்குப் பதிலாக இவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். முதல் போட்டி செப்டம்பர் 16 முதல் 19 வரையும், இரண்டாவது போட்டி செப்டம்பர் 23 முதல் 26 வரை நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் லக்னோவில் நடைபெறுகின்றன. இந்த இரண்டு போட்டிகளை தொடர்ந்து, செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் கான்பூரில் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்தியா ஏ அணி முழு விவரம்
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), துருவ் ஜூரல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, மனவ் சுதர், யாஷ் தாக்கூர்.
About the Author
RK Spark