ஹராரே,
இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா (15 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை தொடவில்லை.
முன்னணி வீரர்களான நிசங்கா 8 ரன்களிலும், குசல் மெண்டிஸ் ஒரு ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் டக் அவுட் ஆகியும் அணிக்கு பின்னடைவை கொடுத்தனர். 17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்க உள்ளது.