லண்டன்,
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இருபெரும் ஜாம்பவான்கள் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்ததோடு டெஸ்ட் அணிக்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களின் இழப்பு தெரியாத அளவுக்கு விளையாடிய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்து அசத்தியது.
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய இழப்புத்தான் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ரோலண்ட் புட்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய இந்திய அணியில் உள்ள ஒரே மேட்ச் வின்னர் ரிஷப் பண்ட்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதது நிச்சயம் பெரிய இழப்புதான். ஏனென்றால் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரர்கள் (மேட்ச் வின்னர்கள்). அவர்களால் தனி ஆளாக ஆட்டத்தை மாற்றிவிட முடியும். தற்போது இந்திய அணி மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. ஆனால் இவர்கள் இல்லாமல் அணி அவ்வளவு சிறப்பாக இருக்காது. அவர்களுக்கு மாற்றாக வந்துள்ள வீரர்கள் மிகவும் திறமையானவர்கள்.
இனிவரும் காலங்களில் இளம் வீரர்கள் அவர்களது இடத்தை மெல்ல மெல்ல நிரப்புவார்கள் என்று நினைக்கிறேன். எனவே, அடுத்த 2 ஆண்டுகள் இந்திய அணிக்கு ஒரு மாற்றத்தின் காலமாக இருக்கும். அவர்கள் ஆட்டத்தை மாற்றக் கூடிய பேட்ஸ்மேன்களைக் கண்டறிய வேண்டும். தற்போது அணியில் உள்ள ஒரே ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே. தற்போது, அவர்களுக்கு மாற்றாக வந்தவர்கள் யாரும் இந்த இருவரை விட சிறந்தவர்கள் இல்லை, ஏனென்றால் பல ஆண்டுகளாக அவர்களின் சாதனை அவர்கள் உலகின் சிறந்த வீரர்களில் இருவராக இருந்ததை நிரூபித்துள்ளது” என்று கூறினார்.