டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது இந்திய அணி சுப்மான் கில் தலைமையில் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட கருண் நாயரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நேற்று இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு நான்கு-நாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதில் கருண் நாயர் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் இனி அவரது பெயர் தேர்வுக்குழுவில் இடம் பெறாது என்று கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
இங்கிலாந்து தொடரில் சொதப்பல்!
2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் அடித்து இருந்தார் கருண் நாயர். வீரேந்தர் சேவாக்கிற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார் கருண் நாயர். இருப்பினும் அதன் பிறகு அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய அவருக்கு, கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி தொடரில், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறினார். மொத்தம் 6 இன்னிங்ஸ்களில், ஒரு முறை மட்டுமே 50 ரன்களை கடந்து இருந்தார்.
இந்தியா A அணியில் இடம் பெறவில்லை!
இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் இடம் பெறாமல் போனது, அவரது சர்வதேச வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது, கருண் நாயரின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக சமீபத்தில் நடந்த மகாராஜா டி20 லீக் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த காயம் காரணமாகவும் இந்தியா A அணியில் கருண் நாயர் பெயர் இடம் பெறாமல் போய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், பிசிசிஐ அறிக்கையில் அவரது காயம் குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
கருண் நாயர் போன்ற மூத்த வீரர்களுக்கு பதிலாக தேர்வுக்குழு, இளம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளித்துள்ளது. ஆசிய கோப்பை மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சமீபத்திய உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் என். ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக, துலீப் கோப்பை அரையிறுதியில் 197 ரன்கள் அடித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். துலீப் கோப்பையில் சாதனை படைத்த ஹர்ஷ் துபே மற்றும் டெல்லி கேப்டன் ஆயுஷ் படோனி ஆகியோருக்கும் முதல் முறையாக இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கே.எல். ராகுல் மற்றும் முகமது சிரா
இங்கிலாந்து தொடரில் அசத்திய மூத்த வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர், இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அவர்களுக்கு இது ஒரு பயிற்சி ஆட்டமாக இருக்கும்.
About the Author
RK Spark