இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட இருவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ‘ஏ’ அணிக்காக இருவரும் விளையாட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் திருப்பம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக இருவரும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
கான்பூரில் நடக்கும் போட்டிகள்
இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையே மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இந்த தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம் பெறலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ புதிய முடிவு
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஐபிஎல் 2025 தொடருக்கு பிறகு இருவரும் எந்தவொரு போட்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. ரோஹித் சர்மா சமீபத்தில் தனது உடற்சோதனையை முடித்த நிலையில், விராட் கோலி இந்த மாதம் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதி சோதனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் கடைசியாக மார்ச் மாதம் துபாயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினர். அந்த போட்டியில் ரோஹித் சர்மா 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே தொடரில், விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 84 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 100 ரன்களும் குவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா தொடர்
ஆசிய கோப்பை முடிந்த பிறகு அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பெர்த், அடிலெய்டு மற்றும் சிட்னியில் நடைபெறுகின்றன. இந்த முக்கியமான தொடருக்கு முன்பாக கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் போட்டி சூழலுக்கு தங்களைத் தயார்படுத்தி கொள்ளவே இந்த இந்தியா ‘ஏ’ தொடரில் விளையாட உள்ளனர். இதன் மூலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் அவர்கள், தங்களது பார்ம் மற்றும் உடற்தகுதியை சோதித்துக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் கோலி 50 போட்டிகளில் 2451 ரன்களும், ரோஹித் 46 போட்டிகளில் 2407 ரன்களும் குவித்துள்ளனர்.
About the Author
RK Spark