ICC T20 World Cup 2026: 10வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 2016ஆம் ஆண்டுக்கு பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இலங்கையிலும் சில போட்டிகளை நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
ICC T20 World Cup 2026: 20 அணிகள் மோதல்
20 அணிகள் விளையாடும் மிகப்பெரிய தொடராக 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அமைய இருக்கிறது. 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளன. இந்தியா, இலங்கை அணிகள் தொடரை நடத்துவதால் இரு அணிகளும் நேரடியாக தகுதிபெற்றுவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் என 12 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுவிட்டன.
ICC T20 World Cup 2026: தொடரின் பார்மட்
தொடர்ந்து அமெரிக்கா தகுதிச்சுற்று போட்டிகளில் வென்று கனடா அணியும், ஐரோப்பிய தகுதிச்சுற்று போட்டிகளில் வென்று இத்தாலி, நெதர்லாந்து அணிகள் தகுதிபெற்றுவிட்டன. இன்னும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து 2 அணிகளும், ஆசிய பசிபிக் நாடுகளில் இருந்து 3 அணிகள் இன்னும் உறுதிசெய்யப்படாமல் உள்ளன. முதல் சுற்றைப் பொருத்தவரை, நான்கு பிரிவுகளில் அணிகள் மோதிக்கொள்ளும். அதன்பின், சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறும். அதன்பின், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என 2024 பார்மட்டில்தான் இத்தொடரும் நடைபெறுகிறது.
ICC T20 World Cup 2026: பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடாது
இதில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட இந்தியாவில் விளையாடாது எனலாம், பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். அரையிறுதிப் போட்டியில் ஒன்று கொழும்பு பிரேமதசா மைதானத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தகுதிபெற்றால் இறுதிப்போட்டி இலங்கையில் திட்டமிடப்பட்டும். இல்லையெனில் இந்தியாவில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் அல்லது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி திட்டமிடப்படலாம்.
ICC T20 World Cup 2026: இந்தியாவுக்கு சாதகம்
நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை தக்கவைக்க பெரு முயற்சி எடுக்கும். அதுவும் சொந்த நாட்டில், துணை கண்டத்திலேயே போட்டிகள் நடைபெறுவதால் இந்தியாவுக்கு பெரிய சாதகமும் இருக்கிறது. இந்நிலையில், 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை திட்டமிடப்பட்டுள்ள தேதிகள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ICC T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை எப்போது?
வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20ஐ, ஓடிஐ தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடர் நடைபெறும். அதன்பிறகே, ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெறும். அதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. நவம்பரில் இருந்து மே மாத இறுதிவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எந்தவொரு குறைவுமில்லாமல் நீண்ட கிரிக்கெட் திருவிழாவே காத்துக்கொண்டிருக்கிறது.