மும்பை,
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மா நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக ஆடி வந்த அவரை முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி அவரின் கெரியரை மாற்றினார். அந்த வாய்ப்பில் அசத்தி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளார். தற்போது சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவு செய்துள்ளார்.
சமீப காலமாக சொந்த சாதனைகள் நினைத்து கவலைப்படாத அவர் தொடக்க வீரராக களமிறங்கி குறைந்த பந்துகளை எதிர் கொண்டாலும் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் சர்மா இடம்பெற மாட்டார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்தே பேட்ஸ்மேன்களின் தரம் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் ரோகித் ஆல் டைம் பட்டியலில் இடம் பிடிக்க மாட்டார் என்று மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ரோகித் சர்மா இந்தியாவின் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் பொருந்த மாட்டார். ஏனெனில் நாம் கவாஸ்கர், தெண்டுல்கர் (சச்சின்), டிராவிட் (ராகுல்), மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களைப் பற்றி பேசுகிறோம். ரோகித் அந்த அளவுக்கு அங்கு பொருந்தவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சுயநலமற்ற அணுகுமுறை, கேப்டன்ஷிப் ஆகியவற்றை நீங்கள் குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு, மக்கள் அவர்மீது வைத்திருக்கும் அன்பு அதிகமாக இருக்கிறது. அவர் ஒருபோதும் தன்னைப் பற்றி யோசிக்கவில்லை; அணியின் நன்மைக்காக தனது சொந்த நலன்களை தியாகம் செய்ய தயாராக இருந்தார் என்பதை மக்கள் பார்த்தார்கள். அதுதான் அவரது உண்மையான சிறப்பு. ஒரே ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட 300 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் எல்லா காலத்திலும் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் பற்றி பேசும்போது, டெஸ்ட் கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்” என கூறினார்.
ரோகித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.