பாகிஸ்தான் அணிக்கு எதிராக இப்படி செய்வீங்களா? சூர்யகுமார் யாதவுக்கு கேள்வி

Suryakumar Yadav : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் பேட்டர் ஜுனைத் சித்திக்கை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா நேற்று விளையாடியது. யுஏஇ அணிக்கு எதிரான அப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றியையும் பெற்றது. இருப்பினும் அப்போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த ஒரு செயல் இப்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் பேட்டர் ஜுனைத் சித்திக் ரன்அவுட் செய்யப்பட்ட நிலையில், அவரை கேப்டன் சூர்யகுமார் மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார்.

Add Zee News as a Preferred Source

ஷிவம் துபே வீசிய ஓவரில் ஒரு பந்தை ஜுனைத் சித்திக் அடிக்காமல் விட்டுவிட்டார். பின்னர் கிரீஸூக்கு வெளியேயே நின்று கொண்டிருந்தார். இதனை  கவனித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஸ்டம்பில் பந்தை வீசி அவுட் அப்பீல் கேட்டார். அம்பயர்களும் மூன்றாவது நடுவருக்கு அப்பீலை பரிந்துரைத்தனர். டிவி ரீப்பிளேவில் அவர் கிரீஸூக்கு வெளியே இருந்தது தெரியவர, மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். அந்த நேரத்தில் பேட்டர் ஜுனைத் சித்திக், சிவம் துபே இடுப்பில் இருந்து துண்டு விழுந்ததால் அதனை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அதனால் கவனம் சிதறியதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரிடம் வேண்டுகோள் வைத்தார்.

இதனைக் கேட்டுக் கொண்ட சூர்யகுமார், கள அம்பயரிடம் சென்று ரன்அவுட் அப்பீலை திரும்ப பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் ஜுனைத் சித்திக் மீண்டும் பேட்டிங் செய்தார். இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, கேள்வி எழுப்பியுள்ளார். அந்த இடத்தில் ஜுனைத்துக்குப் பதிலாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இருந்திருந்தால், சூர்யகுமார் அவ்வாறு செய்திருப்பாரா?, நிச்சயம் செய்திருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.
சூர்யகுமாரின் இந்த செயல் விளையாட்டின் நேர்மைக்கு அழகானதாகத் தோன்றினாலும், இது ஒரு பிரச்சனையின் தொடக்கப் புள்ளியாகிவிட்டது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சூர்யகுமார் இதேபோன்ற சூழலில், இப்படியான செயலைச் செய்யத் தவறினால், அவரின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுவார் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா மேலும் கூறும்போது, “விதிகளுக்கு உட்பட்டு, நடுவர் அவுட் கொடுத்துவிட்டால், அவர் அவுட்தான். அதற்கு மேல் வேறு எதற்கும் செல்ல வேண்டாம். மீண்டும் ஒரு சூழலில் இப்படி நடக்கும்போது, அப்போது நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்பது தெரியும். ஒருவேளை அந்தநேரத்தில் ஜஜுனைத் சித்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்ததுபோல் மீண்டும் வாய்ப்பு கொடுக்காவிட்டால், அப்போது நீங்கள் ஒரு பாசாங்குக்காரராகத் தெரிவீர்கள். விதிகளுக்கு உட்பட்டு அவுட் ஆக இருந்தால், நடுவர் அவுட் கொடுத்துவிட்டால், பேட்ஸ்மேன் வெளியேற வேண்டும், அவ்வளவுதான்” என்றார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியால் ரன் எடுக்கவே முடியவில்லை. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அவருக்குத் துணையாக, ஆல்ரவுண்டர் சிவம் துபே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 13.1 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 58 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.