காத்மாண்டு,
நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல், குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். மந்திரிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.
இது நேபாள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட ‘ஜென் சி’ தலைமுறையினர் தலைநகர் காட்மாண்டுவில் கடந்த 8-ந்தேதி ஆயிரக்கணக்கில் கூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக வலைத்தள தடையை கண்டித்து அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடத்தியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தலைநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது. இந்த போராட்டம் வன்முறையை தொடர்ந்து உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். அத்துடன் போராட்டக்காரர்களின் கோபத்தை தணிப்பதற்காக சமூக வலைத்தளங்கள் மீதான தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஆனாலும் போராட்டக்காரர்கள் அமைதியடையவில்லை. நேற்று முன்தினம் 2-வது நாளாக மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். காத்மாண்டு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. தலைநகரில் நாடாளுமன்றம், பிரதமரின் வீடு, ஜனாதிபதி அலுவலகம், சுப்ரீம் கோர்ட்டு என ஏராளமான அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. ஜனாதிபதி வீடு, முன்னாள் பிரதமர் பிரசந்தாவின் வீடு என பல மூத்த அரசியல் தலைவர்களின் வீடுகள் தாக்குதலுக்கு ஆளாகின.
இவ்வாறு வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த சில நிமிடங்களில் அவர் பதவி விலகினார். பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியபோதும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
எனவே ராணுவம் களத்தில் இறங்கியது. நேற்று முன்தினம் இரவில் இருந்து நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி நாடு முழுவதும் நேற்று மாலை 5 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும், அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்தது.
மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்திய ராணுவம், போராட்டம் என்ற போர்வையில் நடக்கும் கொள்ளை, தீ வைப்பு போன்ற சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இத்தகைய கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. எந்தவித ஆர்ப்பாட்டம், சூறையாடல், தீ வைப்பு அல்லது தாக்குதல் சம்பவங்கள் குற்றச்செயலாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ள ராணுவம், அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.
மேலும் போராட்டம் மற்றும் வன்முறையின்போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்குமாறும் போராட்டக்காரர்களை ராணுவம் அறிவுறுத்தி இருக்கிறது. முன்னதாக போராட்டத்தை பயன்படுத்தி நாட்டின் பல பகுதிகளில் கொள்ளை, தீ வைப்பு மற்றும் சூறையாடல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 27 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் அவர்கள் தீவிரமாக ரோந்து சென்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவத்தின் இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக அமைதி திரும்புகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் நேற்று வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் மற்றும் ராணுவம் ஆங்காங்கே ரோந்து சென்றதையும், தீயணைப்பு படையினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. சில இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் ஆங்காங்கே சாலைகளில் நடந்து சென்றதையும் காண முடிந்தது. எனினும் தலைநகர் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
காட்மாண்டுவில் நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள்ளும் நுழைய முயன்றனர். இதனால் அங்கும் பெரும் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து விமான நிலையம் கால வரையின்றி மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
எனினும் நேற்று மாலை 6 மணியில் இருந்து காட்மாண்டு விமான நிலையம் செயல்பட்டுக்கு வந்தது. முன்னதாக விமான நிலையம் மூடப்பட்டதால் காட்மாண்டுக்கு இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா நேற்று 2-வது நாளாக ரத்து செய்தது. இதைப்போல ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களும் காட்மாண்டு விமானங்களை ரத்து செய்துள்ளன.
இந்நிலையில் நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான ஆலோசனையில் போராட்டக்காரர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் இடைக்கால பிரதமராக சிலரின் பெயர்களையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர். முக்கியமாக நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, காத்மாண்டு மேயர் பலேந்திர ஷா மற்றும் நேபாள மின்வாரிய முன்னாள் தலைமை செயல் அதிகாரி குல்மான் கிஷிங் ஆகிய 3 பேரில் ஒருவரின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ குழுவினர் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.