நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதியும் அறிவிப்பு

காட்மாண்டு,

நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்து உள்ளார்.

நேபாள போராட்டம் குறித்த விவரம்

நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்தது.இதனால் பெரும் கொந்தளிப்புக்கு ஆளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடஙகிய ‘ஜென் சி’ தலைமுறையினர் காட்மாண்டுவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடினர். இதில் ஏற்பட்ட கலவரம் மற்றும் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் போராட்டமும், வன்முறையும் நாடு முழுவதும் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி 9-ந் தேதி பதவி விலகினார்.உடனடியாக நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை ராணுவம் கையில் எடுத்தது. அத்துடன் வன்முறை ஓய்ந்து நாடு முழுவதும் படிப்படியாக அமைதியும், இயல்பு நிலையும் திரும்புகிறது.

பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இடைக்கால அரசின் பிரதமராக நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி (வயது 73), காட்மாண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட 4 பேர் பெயர்களை பரிந்துரைத்தனர்.இதில் சுசீலா கார்கிக்கு அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் போராட்டக்காரர்களின் ஆதரவும் இருந்ததால் அவர் இடைக்கால பிரதமராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இரவு நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதன் மூலம் நாட்டின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2016-ம் ஆண்டு நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், 11 மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராக அவர் காட்டிய கடுமையே, ஜென் சி தலைமுறையினரின் பிரதமர் தேர்வுக்கு காரணமாக இருந்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.