ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வரும் இந்திய அணி, செப்டம்பர் 14ம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்றது. இதன் மூலம் குரூப் A புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் அணியுடனான இந்த வெற்றிக்கு பிறகு, இந்திய அணிக்கு சில நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்? எங்கே நடைபெறவுள்ளது? என்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source
சூப்பர் 4 சுற்றை உறுதி செய்த இந்தியா
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு எதிரான தனது முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் +4.793 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த இரண்டு வெற்றிகளின் மூலம், இந்திய அணி தனது 3வது போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது?
சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி தனது மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், ஓமன் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி, வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 19 அன்று, அபுதாபியில் உள்ள ஷேக் சயத் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 8:00 மணிக்கு தொடங்கும். ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், ஓமன் அணிக்கு எதிரான இந்த போட்டியில், இந்திய அணி தங்களது ஆடும் லெவனில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங் 100வது விக்கெட்டை
சர்வதேச டி20 போட்டிகளில், இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான அர்ஷ்தீப் சிங் இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவர் சர்வதேச டி20 அரங்கில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 100வது விக்கெட்டை எட்ட அவருக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. எனவே, ஓமன் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, இந்த மைல்கல்லை எட்ட வழிவகை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
குல்தீப் யாதவின் அசத்தல் பந்துவீச்சு
இந்த தொடரில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்பவர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக வெறும் 13 பந்துகளை வீசி, 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதே ஃபார்மை பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்த அவர், 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். அவருடன் அக்சர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தனர்.
About the Author
RK Spark