ஆசிய கோப்பை 2025 தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங், இலங்கை என 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை 9 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று (செப்டம்பர் 17) தொடரின் 10வது லீக் ஆட்டம் பாகிஸ்தான் – யுஏஇ அணிகளுக்கு இடையே 8 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் போட்டி 1 மணி நேரம் தாமதமாக தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
பாகிஸ்தான் அணி இத்தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. முதல் போட்டி ஓமனுக்கு எதிராக விளையாடி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் இப்போட்டியில் தோல்வி அடைந்ததை விட மிகவும் பேசப்பட்டது, இப்போட்டியில் எழுந்த சர்ச்சைகள்தான்.
ஏற்கனவே பகல்காம் தாக்குதலின் தாக்கத்தின் காரணமாக இப்போட்டி நடைபெறுமா? இந்திய அணியின் வீரர்கள் போட்டியை நிராகரிப்பார்களா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் விளையாடினர். ஆனால் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கைக்கொடுக்கவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையானது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இரண்டு அணி வீரர்களும் கைக்கொடுக்க வேண்டாம் என்று நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்தான் கூறினார். எனவே அவரை தொடரைவிட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் இத்தொடரைவிட்டு விலகுகிறோம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு ஐசிசி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டியில் மட்டும் நடுவராக செயல்பட தடை விதித்தது.
ஐசிசி நடவடிக்கை எடுத்ததை அடுத்து யுஏஇ அணிக்கு எதிரான போட்டி நடைபெறுவது உறுதியானது.
இந்த நிலையில் போட்டி வழக்கம்போல் 8 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு மணி நேரம் தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறிது தாமதத்திற்குப் பிறகுதான் பாகிஸ்தான் அணியின் பேருந்து ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
About the Author
R Balaji