பெங்களூர்,
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் வங்கிக்குள் நுழைந்தனர். வங்கி பணி நேரம் முடிந்ததால் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளை கும்பல், அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
.வங்கி அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, மொத்தம் ரூ. 21 கோடிக்கு மேல் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் சுமார் 20 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் அவர்கள் தப்பிச் சென்றதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கிலோ தங்க நகையின் மதிப்பு சுமார் ரூ. 20 கோடியாகும்.
வங்கி மேலாளரின் புகாரின் அடிப்படையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடகாவில் எஸ்பிஐ வங்கியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.