துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு அரங்கேறிய ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த அமீரக கேப்டன் வாசீம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பஹர் ஜமான் அரைசதம் அடித்தார். யுஏஇ தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன சைம் அயூப் 2 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். நடப்பு ஆசிய கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் அனைத்திலும் டக் அவுட் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனையும் சேர்த்து சைம் அயூப் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை டக் அவுட் ஆகி உள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர்களின் மோசமான சாதனையில் ஷாகித் அப்ரிடியை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 8 முறை டக் அவுட் ஆகி உள்ளனர். இந்த பட்டியலில் உமர் அக்மல் (10 முறை) முதலிடத்தில் உள்ளார்.