Asia Cup 2025 Super 4, India vs Pakistan Highlights: ஆசிய கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 சுற்று கடந்த செப். 20ஆம் தேதி தொடங்கியது. சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் அணி இலங்கை அணியை வீழ்த்தி மிரட்டியது.
Add Zee News as a Preferred Source
தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாயில் நடைபெற்றது. இரு அணிகளும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்தன. இந்திய அணியை பொருத்தவரை அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு பதில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.
India vs Pakistan Highlights: பாகிஸ்தானின் அதிரடி ஓபனிங்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி அதன் பேட்டிங்கை அதிரடியாக தொடங்கியது. ஃபக்கார் ஜமான் அதிரடியாக விளையாடி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபர்ஹான் மறுமுனையில் அதிரடி காட்டினார். பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களை அடித்தது.
அடுத்து வந்த சயிம் அயூப் நிதானம் காட்ட தொடர்ந்து ஃபர்ஹான் அதிரடி காட்டினார். சிவம் தூபே வீசிய 11வது ஓவரில் சயிம் அபூப் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் இருந்து பாகிஸ்தானின் ரன்வேகம் குறையத் தொடங்கியது. தூபே உடன் வருண் மற்றும் குல்தீப் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஹூசைன் 10, ஃபர்ஹான் 58 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் 190-200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் 150 ரன்களை தாண்டவதே கடினம் என்ற நிலை வந்தது.
India vs Pakistan Highlights: 172 ரன்கள் இலக்கு
ஆனால், கேப்டன் சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ் ஆகியோர் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து பாகிஸ்தானை 150 ரன்களை தாண்ட வைத்தனர். நவாஸ் ஆட்டமிழந்ததும் உள்ளே வந்த ஃபஹீம் அஷ்ரஃப் கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்ட மொத்தம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 171 ரன்களை எடுத்தது. சிவம் தூபே 2, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். பும்ரா, வருண் சக்ரவர்த்தி இருவரும் விக்கெட் எடுக்கவே இல்லை. வருண் 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்தார், ஆனால் பும்ரா 4 ஓவர்களில் 45 ரன்களை கொடுத்து அதிர்ச்சியளித்தார். அதில் முதல் 3 ஓவர்கள் பவர்பிளேவில் வீசியது குறிப்பிடத்தக்கது.
India vs Pakistan Highlights: பவர்பிளேவில் பறக்கவிட்ட அபிஷேக் – கில் ஜோடி
தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்கை அபிஷேக் சர்மா – சுப்மான் கில் ஜோடி அதிரடியாகவே தொடங்கியது. அதாவது ஷாஹின் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்ஸருடன் தொடங்கினார். பயமின்றி இந்த ஜோடி விளையாடி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 69 ரன்களை அடித்தது. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
India vs Pakistan Highlights: பௌலர்கள் – பேட்டர்கள் வாக்குவாதம்
பவர்பிளேவில் பௌலர்கள் – பேட்டர்கள் இடையே வாக்குவாதத்தையும் காண முடிந்தது. கில் – ஷாஹின் அஃப்ரிடி இடையேவும், அபிஷேக் – ராஃப் இடையேயும் வாக்குவாதம் நடந்தது. அது ஒருபுறம் இருக்க, 24 பந்துகளில் அபிஷேக் அதிரடியாக அதிவேகமாக அரைசதம் அடித்தார். டி20ஐ போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக வேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை அபிஷேக் பெற்றுள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங் 29 பந்துகளில் அடித்திருந்ததே வேகமாக அரைசதமாக இருந்தது. அபிஷேக் – கில் ஜோடி 100 ரன்களை தாண்டியது. 105 ரன்கள் பார்ட்னர்ஷிப்பின்போது, கில் 47 ரன்களில் ஃபஹீம் அஷ்ரஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹரீஸ் ராஃப் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் டக்அவுட்டானார்.
India vs Pakistan Highlights: அபிஷேக்கின் மிரட்டும் ஸ்ட்ரைக் ரேட்
விக்கெட்டுகள் சரிந்தாலும் அபிஷேக் ஒருமுனையில் அதிரடியை தொடர்ந்தார். இருப்பினும், அப்ரார் அகமது வீசிய 13வது ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர் என 74 ரன்களை அடித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 189.74 ஆகும். அவர் ஆட்டமிழந்த பின்னர் சஞ்சு சாம்சன் உள்ளே வந்து திலக் வர்மா உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இவராலும் பெரியளவில் அதிரடி காண்பிக்க முடியவில்லை.
India vs Pakistan Highlights: ஆட்டத்தை முடித்து வைத்த திலக்
சஞ்சு சாம்சன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தார். ஹர்திக் – திலக் என்ற மும்பை இந்தியன்ஸ் மிடில் ஆர்டர் இணை இங்கு இணைய ஆட்டமும் 19வது ஓவரிலேயே முடிந்தது. ஷாஹின் அஃப்ரிடி வீசிய 19வது ஓவரின் 4வது மற்றும் 5வது பந்துகளில் முறையே சிக்ஸர், பவுண்டரியை பறக்கவிட்டு திலக் வர்மா ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்படி இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 7 பந்துகளை மிச்சம்வைத்தும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. திலக் வர்மா 30(19), ஹர்திக் பாண்டியா 7(7) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரீஸ் ராஃப் 2, அப்ரார் மற்றும் ஃபஹீம் அஷ்ரப் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
#TeamIndia continue their winning run in the #AsiaCup2025!
Scoreboard https://t.co/CNzDX2HKll pic.twitter.com/mdQrfgFdRS
— BCCI (@BCCI) September 21, 2025
India vs Pakistan Highlights: ஆட்ட நாயகன்… அடுத்தடுத்த போட்டிகள்
அதிரடியாக விளையாடி அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளதால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. வரும் செப். 24ஆம் தேதி வங்கதேசம் அணியுடனும், செப். 26ஆம் தேதி இலங்கை அணியுடனும் இந்தியா மோத உள்ளது. இதில் ஒன்றில் வென்றாலும் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு 99% உறுதியாகும்.