வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புதிய பொறுப்புகளை பலருக்கும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கான சிறப்பு உதவியாளராக பணியாற்றி வரும் லிண்ட்சே ஹல்லிகனை, விர்ஜீனியா மாகாணத்தின் கிழக்கு மாவட்டத்திற்கான வழக்கறிஞராக நியமித்து டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதனை ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் டிரம்ப் பகிர்ந்து இருக்கிறார். அதில், நீண்டகாலம் என்னுடைய பணியாற்றிய அனுபவம் கொண்ட லிண்ட்சே, கண்டிப்பான, திறன் படைத்த மற்றும் விசுவாசமிக்க வழக்கறிஞர் ஆவார்.
புளோரிடா மாகாணத்தில் பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள என்னுடைய வீட்டில் அரசியலமைப்புக்கு எதிராக, ஜோ பைடன் தலைமையிலான இடதுசாரி சிந்தனையுடனான ஜனநாயக கட்சி சோதனையில் ஈடுபட்டபோது, என்னுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் லிண்ட்சே.
அறிவார்ந்த, பயமற்ற மற்றும் அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி மற்றும் உதவி அட்டர்னி ஜெனரல் டாட் பிளாஞ்ச் ஆகியோருடன் ஒன்றாக பணியாற்றியவர்.
நீங்கள் நீதிக்காகவும், விர்ஜீனியா மாகாணம் மற்றும் நம்முடைய நாட்டுக்காகவும் சிறந்த செயல்களை செய்வீர்கள். லிண்ட்சேவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்குங்கள் என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.