Shreyas Iyer: 2025 ஆசியக் கோப்பைக்குப் பிறகு அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்தியா மீண்டும் களமிறங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் பல வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற சில முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பிசிசிஐ இரானி கோப்பைக்கான அணியையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியையும் அறிவித்தது.
Add Zee News as a Preferred Source
அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெற்றுள்ளது. டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் இடம்பெறாதது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு அறுவை சிகிச்சையிலிருந்து மீளவும், நீண்ட நேர ஆட்டத்தின் போது ஏற்படும் தசைப்பிடிப்புகளிலிருந்து விடுபடவும் ஆறு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஓய்வு நேரத்தில் அவர் தனது உடல் வலிமையையும், உடற்தகுதியையும் மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
“ஷ்ரேயாஸ் ஐயர் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஆறு மாதங்கள் ஓய்வு எடுக்க பிசிசிஐ-க்குத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் முதுகு அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதிலிருந்து நன்கு மீண்டு வந்த அவர், நீண்ட நேர ஆட்டத்தின்போது மீண்டும் மீண்டும் முதுகுத் தசைப்பிடிப்பு மற்றும் விறைப்புத்தன்மையை அனுபவித்து வருகிறார். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி உடல் வலிமையையும், உடற்தகுதியையும் மேம்படுத்திக்கொள்ள அவர் விரும்புகிறார். அவரது முடிவைக் கருத்தில் கொண்டு, இரானி கோப்பைக்கான அணித் தேர்வில் அவர் பரிசீலிக்கப்படவில்லை,” என்று பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான கேப்டன்
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ஸ்ரேயாஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், அப்படியான திட்டம் பிசிசிஐ-யிடம் இல்லை, அதுதொடர்பாக வெளியான தகவல்கள் எல்லாம் வதந்திகளே என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, அவருடைய இடத்துக்கு ஸ்ரேயாஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் பரவிக் கொண்டிருந்தற்கு பிசிசிஐ இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நித்திஷ் ரெட்டி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், என். ஜெகதீசன்.
About the Author
S.Karthikeyan