சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். கடந்த மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தியவரான அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒதுங்கியதால் அவருக்கு பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அவரை ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஷ் லீக் (பி.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டிக்கு இழுக்க 4 அணிகள் முயற்சித்தன. சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணி நிர்வாகங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த நிலையில் பிக்பாஷ் லீக் தொடரில் அஸ்வின், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சிட்னி தண்டர் அணியின் ஜெர்சியில் அஸ்வின் என அச்சிடப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்தாண்டின் பிக்பாஷ் லீக் தொடர் டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது.