ஆசிய கோப்பை தொடரில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூர்-ல் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் பங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் கூறி இருந்தார்.
Add Zee News as a Preferred Source
சூர்யகுமார் யாதவ்வின் இந்த கருத்துக்கள்தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. அதாவது, விளையாட்டு வீரருக்கான நடத்தை விதிகளை அவர் மீறுவதாகவும் கிரிக்கெட்டில் அரசியலை கலப்பதாகவும் பிசிபி குறிப்பிட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் சூர்யகுமார் யாதவிடம் இது தொடர்பான விளக்கத்தை கேட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளன.
இந்திய அணியின் கேப்டன் இந்த குற்றச்சாட்டை மறுத்தால், நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிரதிநிதி ஆகியோர் கலந்துகொள்ளும் ஓர் அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்படும். ஒருவேளை குற்றச்சாட்டை சூர்யகுமார் யாதவ் ஒப்புக்கொண்டால், விதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படும்.
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால், சூர்யகுமார் யாதவ்-க்கு தடை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் அணி பிசிசிஐ-யை பழிவாங்குகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது பிசிசிஐ புகார் அளித்திருந்தது . அவர்கள் ஆத்திரமூட்டும் வகையில் சைகைகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (pcb) இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது புகார் அளித்துள்ளது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதாக பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji