இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவரை இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றே கூறலாம். டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆதிக்கம் வார்த்தைகளில் அடங்காதவை. இவர் கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதையடுத்து 2025 ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சமீபத்தில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், யூடியூப்பில் கிரிக்கெட் குறித்து பல தகவல்களையும் தெரிவித்து வருகிறார்.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், யாரும் செய்யாத மாபெரும் வரலாற்று சாதனையை செய்திருக்கிறார் அஸ்வின். அவர் ஆஸ்திரேலியாவின் பிரபல லீக்கான பிக் பாஷில் இணைந்திருக்கிறார். அவர் 15வது சீசனில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்தொடரில் பங்கேற்று வரும் பிரபல அணியான சிட்னி தண்டர் 15வது பிபிஎல் சீசனுக்காக அஸ்வினை ஒப்பந்தம் செய்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் பிரபல இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
முன்னதாக இந்தியா U-19 அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2021-2022 சீசனில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அவர் அமெரிக்க அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்த நிலையில், பிக் பாஷ் லீக்கில் இணையும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் மிகவும் பிரபலமான வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) விதிகளின்படி, சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தான் ஒரு வீரர் வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்க வேண்டும். அந்த வகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் உட்பட அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பின்னரே வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடரான பிக் பாஷில் இணைந்திருக்கிறார்.
சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தம் ஆனது குறித்து பேசிய அஸ்வின், என்னை சிட்னி தண்டர் அணி எப்படி பயன்படுத்தப்போகிறது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்த அணியின் தலைவர்களுடன் நடத்திய உரையாடல்கள் சிறப்பாக இருந்தன. சிட்னி அணிக்காக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என அவர் கூறினார்.
சிட்னி தண்டர் அணி விவரம்:
வெஸ் அகர், டாம் ஆண்ட்ரூஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), கேமரூன் பான்கிராஃப்ட், சாம் பில்லிங்ஸ், ஓலி டேவிஸ், லாக்கி ஃபெர்குசன், மத்தேயு கில்க்ஸ், கிறிஸ் கிரீன், ரியான் ஹாட்லி, ஷதாப் கான், சாம் கோன்ஸ்டாஸ், நாதன் மெக்ஆண்ட்ரூ, பிளேக் நிகிதாராஸ், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, டேவிட் வார்னர்.
About the Author
R Balaji