துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடந்து வரும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் ஆடி வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களம் கண்டனர். இதில் கில் 4 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து திலக் வர்மா களம் கண்டார்.
மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 61 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து சாம்சன் களம் இறங்கினார். இந்த இணை அதிரடியாக ஆடியது. இதில் சாம்சன் 39 ரன்னிலும், அடுத்து வந்த பாண்ட்யா 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஆட உள்ளது.