‘பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம்’ – நெதன்யாகு ஆவேசம்

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. சமீபத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் அறிவித்தன. இந்த அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஹமாஸ் அமைப்பினர் தங்கள் குழந்தைகளிடம் யூதர்களை வெறுக்க வேண்டும் என்றும், இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றனர். அதே போல் கிறிஸ்தவர்கள் மீதும் வெறுப்பை விதைக்கின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமான ஜெருசலேம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அங்கு குடியிருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் பாலஸ்தீன தேசிய ஆணையம் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு, ஜெருசலேமில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து போனது.

இப்படிப்பட்டவர்களுக்கு தனி நாடு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்கிறீர்களா? இஸ்ரேல் மீது 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும் நீங்கள் மகத்தான பரிசை வழங்குகிறீர்கள்.

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஜெருசலேமில் இருந்து ஒரு மைல் தொலைவில் பாலஸ்தீனர்களுக்கு ஒரு நாட்டைக் கொடுப்பது என்பது, இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அல்-கொய்தாவுக்கு நியூயார்க் நகரத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு நாட்டைக் கொடுப்பதைப் போன்றதாகும். இது வெறும் பைத்தியக்காரத்தனம். இதை செய்ய ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.