பெய்ஜிங்,
காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இஸ்ரேல், காசாவை இணைக்காது, போரால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் என்பன உள்ளிட்ட 20 நிபந்தனைகள் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் பதிலில், இந்த திட்டத்தை ஆய்வு செய்து அதன்பின் நல்லதொரு முடிவை தெரிவிப்பதாக மத்தியஸ்தர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
“பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆதரிக்கிறது. காசாவில் உடனடி மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை அடையவும், அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும், உள்ளூர் மனிதாபிமான நெருக்கடியை அவசரமாகத் தணிக்கவும் சீனா அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் அழைக்கிறது.” என்றார்.