Asia Cup 2025 Trophy: ஆசிய கோப்பை தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஆசிய கோப்பையை ஒட்டி எந்த ஐசிசி தொடர் இருக்கிறதோ அதன்படியே அத்தொடர் நடைபெறும். அதாவது, வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெறுவதையொட்டி, தற்போது ஆசிய கோப்பை தொடர் டி20ஐ வடிவில் நடைபெற்றது.
Add Zee News as a Preferred Source
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங் காங் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகளும் இருப் பிரிவுகளாக பிரிந்து மோதிய குரூப் சுற்றின் முடிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இருந்தும்; இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் பி பிரிவில் இருந்தும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன.
Asia Cup 2025: தொடர் நாயகனான அபிஷேக் சர்மா
சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒருமுறை மோதிக்கொள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மட்டுமின்றி, குரூப் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று என இத்தொடரில் மட்டும் 3வது முறையாக மோதியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது மட்டுமின்றி, 9வது முறையாக ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றியது. டி20ஐ வடிவில் இந்தியா வெல்லும் 2வது ஆசிய கோப்பை இதுவாகும். இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக திலக் வர்மா மற்றும் தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Asia Cup Trophy: கோப்பையை தூக்கிச் சென்ற டிராபி
செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும் ஒரு சில சர்ச்சைகளால் இந்தியா அணியிடம் (Team India) ஆசிய கோப்பையை ஒப்படைக்கவில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற, இந்திய அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு அப்போது கோப்பை ஒப்படைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, மொஹ்சின் நக்வி தனது கையோடு இந்திய அணி வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய கோப்பையையும், பதக்கத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
Asia Cup Trophy: பிசிசிஐ கடும் கண்டனம்
இதனால், இந்திய அணி ஆசிய கோப்பை இல்லாமலேயே தனது வெற்றிக் கொண்டாட்டத்தை மேற்கொண்டது. மேலும், அடுத்த நாளே அனைத்து வீரர்களும் நாடு திரும்பிவிட்டனர். இது ஒருபுறம் இருக்க, மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) பிசிசிஐயால் பலத்த கண்டனத்திற்கு உள்ளானது. நேற்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொது கூட்டத்தில் பிசிசிஐ சார்பில் ஆஷிஷ் ஷெலர் மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்துகொண்டு, இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியிடம் ஆசிய கோப்பையை ஒப்படைக்க வேண்டும் என கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
Asia Cup Trophy: மொஹ்சின் நக்வி சொன்னது என்ன?
இந்த கூட்டத்தில் மொஹ்சின் நக்வி பிசிசிஐயிடம் தனது தவறுக்கு மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது மொஹ்சின் நக்வி இதுகுறித்து விரிவாக அவரது X பக்கத்தில் விவரித்துள்ளார். மேலும், அதில் தான் பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அதுகுறித்து வெளியான தகவல்களையும் முற்றிலும் மறுத்துள்ளார்.
அதேநேரத்தில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக, நான் அன்று கோப்பையை இந்திய அணியிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தேன், இப்போதும் தயாராக இருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே கோப்பையை பெற விரும்பினால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகம் துபாயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Asia Cup Trophy: ஐசிசியிடம் முறையிடும் பிசிசிஐ
மேலும் அவர், “நான் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்: நான் எந்தத் தவறும் செய்யவில்லை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டேன்” என்றார். மொஹ்சின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் ஆவார். பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரும் ஆவார்.
மொஹ்சின் நக்வி இந்தியா குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டதன் காரணமாக அவரிடம் இருந்து இந்தியா கோப்பையை வாங்காது திட்டமிட்டமாக வீரர்கள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து பிசிசிஐயோ, இந்திய அரசோ உத்தரவிடவில்லை. இது வீரர்களின் முடிவாக இருந்துள்ளது. தற்போது மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்காததை தொடர்ந்து, இந்த விவாகரத்தை வரும் நவம்பரில் நடைபெற இருக்கும் ஐசிசி வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு எடுத்துச் செல்ல பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.