‘செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ – கரூர் நெரிசல் விவகாரத்தில் அதிமுக கேள்வி

சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அதிமுக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதன் விவரம்: ‘கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர். டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார், முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், வருவாய்ச் செயலாளர், மருத்துவத் துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர், இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு.

இவ்வளவு பதற்றப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க திமுக. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? ‘அரசியல் செய்யாதீர்’, ‘அரசியல் செய்யாதீர்’ என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே? உங்கள் பதற்றம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.

ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.

அப்புறம், அந்த பத்து ரூபாய்… இந்தா வர்றோம்… அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.

ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன? Senthil Balaji Model Institutionalised Robbery – நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை. தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை ‘வெளிப்படையாக பேசுகிறேன்’ என்று சொல்லி நியாயப்படுத்த செந்தில் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?

இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், ‘பத்து ரூபாய்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னாலே, ‘பாலாஜி’ என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, அலட்சியத்தை மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?

ஏற்கெனவே “காசு வாங்கினேன்… ஆனா திரும்ப கொடுத்தேன்” என்று சொல்லிதான் அமலாக்கத் துறை வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீர்களே. இப்போ திரும்ப அதே டோனில் பேசுறீர்களே. இந்த முறை சிபிஐ வந்தால்? அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டீஷன்ஸை ஃபாலோ பண்ணுவீங்களா?” என அதிமுக தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.