அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதாவில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த மசோதா நிறைவேறுவதற்கு டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 பேர் வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இதற்கு ஜனநாயக கட்சி தலைமை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில், டிரம்பின் சுகாதார திட்டங்கள் தொடர்பான மருத்துவ காப்பீட்டு சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால், இதனை டிரம்ப் ஏற்க மறுத்ததன் காரணமாக, அவர் கொண்டு வந்த புதிய மசோதா நிறைவேறாமல் தடைபட்டுள்ளது.

மசோதாவுக்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகளும், எதிராக 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த மசோதா நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை.எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.

இதனால், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (அக். 1) நள்ளிரவு 12.01 மணிமுதல், அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். விமானப் போக்குவரத்து தொடங்கி சிறு வணிக கடன் அலுவலகங்களை வரை அனைத்தும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்காததால் அரசு செலவீனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதிய மசோதா நிறைவேறாமல் தடைபட்டுள்ளதால் அரசு உதவி பெறும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், அமெரிக்க ராணுவம் மற்றும் தபால் சேவை உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அரசு முடங்கி இருப்பதன் காரணமாக சுமார் 7.50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தடைபடும் என்றும், இதனால் அமெரிக்க அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ. 3,300 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிதி வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாத நிலையில் கடந்த 2018- ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா அரசு நிர்வாகம் தற்போது முடங்கியுள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது தடை படுவதுடன், தாமதமாகும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு சேவைகள் முடங்கியுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.