புதுடெல்லி: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு ஆய்வு செய்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிபிஐ விசாரணை கோரிய மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவர், தற்போதைய விசாரணை திருப்தி தரவில்லை என கூறி இருக்கிறார். இருந்தும் சிபிஐ விசாரணைக்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது” என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வரும் வெள்ளிக்கிழமை (அக். 10) பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை கதிரேசன், கரூர் தாந்தோணிமலை தங்கம் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்தார்.
நெல்லையைச் சேர்ந்த பிரபாகர பாண்டியன், நெல்லை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்தார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஜி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஜி.எஸ்.மணி, ரவி, செந்தில்கண்ணன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சியாகவும், அமைப்பாகவும் இருந்தாலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கும்போது குடிநீர், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.
சிபிஐ கோரிய மனுக்கள் தள்ளுபடி: சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதை கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய போலீஸாரே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என வலியுறுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு, “கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. போலீஸ் விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. சிபிஐ விசாரணை கோரும் மனுதாரர்களுக்கும் கரூர் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. மனுதாரர்கள் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என உத்தரவிட்டனர். இந்நிலையில், சிபிஐ கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.