மும்பை: இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை இந்தியாவில் அமைக்க உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து இடையே மிகப் பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு மும்பையில் நேற்று நடைபெற்றது. இதயடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை மும்பையில் கெய்ர் ஸ்டார்மெர் சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினரின் சந்திப்பு நடைபெற்றது.
இதில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது இந்தியா – இங்கிலாந்து இடையே கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) அடிப்படையில், வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் பேசும்போது, சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் உட்பட இங்கிலாந்தின் 9 முன்னணி பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை இந்தியாவில் அமைக்க உள்ளன என தெரிவித்தார்.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஏற்கனவே ஹரியானாவின் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் ஆண்டு மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகம் பெங்களூருவிலும், யார்க் பல்கலைக்கழகம் மும்பையிலும் தங்கள் வளாகங்களைத் திறக்க உள்ளன. இதேபோல், அபெர்டீன் பல்கலைக்கழகமும், பிரிஸ்டல் பல்கலைக்கழகமும் மும்பையில் தங்கள் வளாகங்களைத் திறக்க உள்ளன.
லான்ஸ்காஸ்டர், சர்ரே ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளதாக ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். இவை, அடுத்த ஆண்டு முதல் தங்கள் வளாகங்களைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் உலகத் தரம் வாழ்ந்த கல்வியைப் பெறும் நோக்கில் இந்த முயற்சியை இந்திய அரசு எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.