ஸ்டாக்ஹோம்: 2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேரிழவு தரும் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கவரக்கூடிய படைப்புக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது.
ருமேனிய எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் பிறந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை, சாட்டான்டாங்கோ என்ற தனது முதல் நாவலை 1985-ல் வெளியிட்டார். அதுமுதல் ஹங்கேரியில் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக இவர் விளங்கி வருகிறார். இந்த ஆண்டு ‘ஹெர்ஷ்ட் 07769’ என்ற நாவலை இவர் வெளியிட்டுள்ளார். நாட்டின் சமூக அமைதியின்மையை இந்த நாவல் துல்லியமாக சித்தரித்துள்ளதாக பலராலும் பாராட்டப்பெற்றது. இவர் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியரும் கூட.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நாளையும் (அக்.10) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ல் வழங்கப்படும்.