சண்டிகர்: ஹரியானாவில் தற்கொலை செய்துகொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் பி குமார், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அக்டோபர் 7 அன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், ஏடிஜிபியாக இருந்தார். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக உள்ளார். புரன் குமார் தற்கொலை செய்துகொண்ட அன்று, ஹரியானா முதல்வர் சைனி தலைமையிலான குழுவில் இடம்பெற்று ஜப்பானில் இருந்தார். தனது கணவரின் மரணச் செய்தி கிடைத்ததும் அவர் புதன்கிழமையன்று இந்தியா திரும்பினார்.
இந்தச் சூழலில், சில மூத்த அதிகாரிகளுடன், முதல்வர் நயாப் சிங் சைனி இன்று செக்டார் 24-இல் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி அம்னீத் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், புரன் குமாரின் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து முதல்வர் சைனியிடம் அம்னீத் பி குமார் அளித்த மனுவில், ‘புரன் குமாரின் தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். ஹரியானாவின் சக்திவாய்ந்த, உயர் அதிகாரிகள் இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளதால் எங்கள் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவரின் தெளிவான மற்றும் விரிவான தற்கொலைக் குறிப்பு மற்றும் முறையான புகார் இருந்தபோதிலும், இன்றுவரை எந்த எப்ஐஆர்-ம் பதிவு செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த துயரச் செயலுக்கு நேரடியாக வழிவகுத்த துன்புறுத்தல், அவமானம் மற்றும் மனரீதியான சித்திரவதை சூழலை உருவாக்கியதற்குப் பொறுப்பான நபர்கள் குறித்து தற்கொலைக் குறிப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பை உடனடி சட்ட நடவடிக்கை கோரும் முக்கியமான சான்றாகக் கருத வேண்டும்.
இந்தப் புகாருக்குப் பிறகு, இந்த ‘உயர் பதவியில் இருக்கும் சக்திவாய்ந்த அதிகாரிகள்’ என்னையும் என் குடும்பத்தினரையும் அவதூறு செய்ய முயற்சிப்பார்கள், மேலும் துறை ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ என்னை சிக்க வைக்க முயற்சிப்பார்கள் என்ற தீவிர அச்சம் எனக்கு உள்ளது. உயர் அதிகாரிகளின் “திட்டமிட்டு நடத்தப்பட்ட துன்புறுத்தலின்” விளைவாகவே எனது கணவரின் மரணம் ஏற்பட்டது.
பிஎன்எஸ் பிரிவு 108 மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தின் விதிகளின் கீழ் ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் சத்ருஜீத் கபூர் மற்றும் மற்றொரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.
எனது கணவர் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்துடன் சேவை செய்த ஒரு காவல் துறை அதிகாரி. அவர் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தைப் பெற்றவர். மேலும், அவர் பட்டியல் சமூகத்தின் முக்கிய பிரதிநிதி மற்றும் வலிமையான தூணாகவும் இருந்தார். சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த எண்ணற்ற தனிநபர்களுக்கு அவர் உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் அளித்தார். எனவே அவரது துயர மரணம் பட்டியல் சாதி சமூகத்தினரிடையே ஆழ்ந்த துக்கத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தற்கொலைக் குறிப்பிலும் அதனுடன் தொடர்புடைய புகாரிலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களுக்கும் எதிராக சட்டத்தின்படி உடனடியாக வழக்குப் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். எங்களின் இரண்டு மகள்கள், கடுமையான அச்சுறுத்தலுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். எனவே எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
புரன் குமார் தனது 8 பக்க தற்கொலை குறிப்பை தட்டச்சு செய்து அதில் கையொப்பமிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் 2020 முதல் ஹரியானாவின் சம்பந்தப்பட்ட அந்த மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து நடத்தப்படும் அப்பட்டமான சாதி அடிப்படையிலான பாகுபாடு, இலக்கு வைக்கப்பட்ட மன துன்புறுத்தல், பொது அவமானம் மற்றும் அட்டூழியங்கள் தாங்க முடியாதவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.