வாஷிங்டன்: வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக நோபல் குழுவை வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிரப் ட்ரம்ப் தொடர்ந்து அமைதிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வார். போர்களை முடிவுக்குக் கொண்டு வருவார். உயிர்களைக் காப்பாற்றுவார். அவருக்கு மனிதாபிமான இதயம் உள்ளது. அதோடு, அவரின் விருப்பத்தின் சக்தி மலைகளைக்கூட நகர்த்தவல்லது. அவரைப் போல வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நோபல் குழு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும், அதற்கு எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு அந்தப் பரிசு கிடைக்கவிலை. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
விருது அறிவிப்பை தி நார்வேஜியன் நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு டொனால்ட் ட்ரம்ப்புக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்திருப்பதையே, வெள்ளை மாளிகையின் அறிக்கை உணர்த்துகிறது.