பெர்த்
ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் குவிநானா சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு விரைவாக கடந்து செல்லும். இந்நிலையில், காலை வேளையில் வாத்து ஒன்று தன்னுடைய குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த வழியே சென்றது.
இதனால், வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்று விட்டன. வாத்து, அதனுடைய குஞ்சுகளுடன் மெல்ல நடந்து சென்றன. அவை சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்கள் அந்த பகுதியிலேயே காத்திருந்தன. இந்த சம்பவத்தின்போது, விரைவாக வந்த 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. வாத்து குடும்பத்திற்காக வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்ற காட்சி வீடியோவாக வைரலானது. அதே இடத்தில் தொடர்ந்து 2-வது நாளாக வாத்து குஞ்சுகள் சாலையை கடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றிய வீடியோவை மேற்கு ஆஸ்திரேலியாவின் வாகன போக்குவரத்து கழகம் அதனுடைய எக்ஸ் பதிவில் வெளியிட்டது. அதுதொடர்பான செய்தியில், வாகன ஓட்டிகள் மிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
வாத்துகள், வாத்து குஞ்சுகள் அல்லது வனவாழ் விலங்குகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டால், நீங்கள் காரிலேயே இருங்கள். உதவிக்கு தொலைபேசி வழியே அழையுங்கள் என தெரிவித்து உள்ளது.